இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் திகதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு 22-03-2013 இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 'எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல.
நிறைவேற்ற முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்க முடியும்.
மாபெரும் எங்கள் போராட்டத்தை அற்பப் புழுவைப்போல மத்திய அரசு நினைத்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியதுபோல இப்போதும் ஏமாற்றிவிட்டது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இந்திய அரசை ஒதுபோதும் மன்னிக்க முடியாது. எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசுக்கு நாங்கள் ஏன் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்கு இனியும் நாங்கள் ஒத்துழைக்கப்போவது இல்லை.
இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னேறும். இதில் மாணவர்களின் ஒற்றுமைதான் மையம். ஈழத் தமிழ் மக்களுக்கு தாயக அதிகாரம் பெற்றுத் தரும் வரையில் மாணவர் போராட்டம் தொடரும்.